கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி 8 கிராம மக்கள் சாலை மறியல்
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி 8 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி 8 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்ணீர் திறப்பு
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் மன்னவராதி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பாசனத்தை நம்பி சிலுக்குவார்பட்டி, மன்னவராதி, சீரங்கம்பட்டி, கவிராயபுரம் உள்ளிட்ட 8 கிராமங்களில் சுமார் 10 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடக்கிறது. ஆனால் போதிய மழையில்லாததால் கடந்த 15 ஆண்டுகளாக மன்னவராதி கண்மாய் நிரம்பவில்லை. கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பும் இதற்கு ஒரு காரணமாக உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதேபோல் நிலக்கோட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் அதிக அளவு மழை பெய்தது. இதனால் நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பின. ஆனால் சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த கண்மாய் மழை பெய்தும் வறண்டு காணப்படுகிறது. மேலும் அதனை நம்பியுள்ள 8 கிராம விவசாயிகளும் வேதனை அடைந்தனர்.
கிராம மக்கள் மறியல்
இதைத்தொடர்ந்து மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தாரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில் சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீரை வேறு கண்மாய்க்கு திருப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. இதற்கிடையே பக்கத்து கிராமங்களில் உள்ள மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சிலுக்குவார்பட்டி, மன்னவராதி உள்பட 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி நேற்று சிலுக்குவார்பட்டியில் உள்ள மதுரை-நிலக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் சிலுக்குவார்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story