வேடசந்தூர் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது


வேடசந்தூர் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது
x
தினத்தந்தி 2 Jan 2022 12:30 AM IST (Updated: 2 Jan 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைபறிப்பில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைபறிப்பில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மூதாட்டிகளிடம் நகைபறிப்பு
வேடசந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாலையில் தனியாக வரும் முதியவர்களை குறிவைத்து நகைபறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதுகுறித்த புகார்களின் பேரில் வேடசந்தூர் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் நேற்று முன்தினம் வேடசந்தூர் போலீசார் ரோந்து சென்றபோது, வடமதுரை சாலையில் ஒரு மூதாட்டியிடம் ஆணும், பெண்ணும் பேசி கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென அந்த ஆண், தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பினார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
பெண் கைது
விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள தெலுங்குபட்டியை சேர்ந்த அரியதம்பி மனைவி சுமதி (வயது 38) என்பதும் தப்பியோடியது தோகைமலையை சேர்ந்த கணேசன் (40) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்த மீனம்மாள் (65) என்ற பெண் உள்பட 3 மூதாட்டிகளிடம் நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த நகைபறிப்புக்கு அவர்கள் நூதன முறையை பின்பற்றி வந்தனர்.
அதாவது சாலையில் தனியாக வரும் மூதாட்டிகளிடம் நைசாக பேச்சு கொடுத்து டீ வாங்கி கொடுப்பார்கள்.  அப்போது அவர்களுக்கு தெரியாமல் டீயில் தூக்கமாத்திரையை கலந்து விடுவார்கள். அதனை குடிப்பவர்கள் மயங்கியதும் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து விட்டு தலைமறைவாகிவிடுவார்கள்.  இவர்கள் வேடசந்தூர் மட்டுமின்றி திருச்சி பகுதியிலும் நகைபறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story