பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் பலத்த மழை: சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு


பந்தநல்லூர் பகுதியில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.
x
பந்தநல்லூர் பகுதியில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.
தினத்தந்தி 2 Jan 2022 1:02 AM IST (Updated: 2 Jan 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் பலத்த மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்கதிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரத்தநாடு:-

பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் பலத்த மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்கதிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

ஒரத்தநாட்டில் கனமழை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரத்தநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சம்பா நெல் அறுவடை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு, சாலையோரங்களில் குவித்து வைத்து காத்திருக்கும் நிலையில் மழை பெய்து இருப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. 
அதேநேரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையில் நனைந்து சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. சில இடங்களில் அறுவடை எந்திரங்கள் வயலுக்குள் செல்லமுடியாத அளவிற்கு நீர் சூழ்ந்துள்ளது.
இதேபோல் நிலக்கடலை பயிர்களும் தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொங்கல் நெருங்கிவரும் நிலையில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய காத்திருந்த விவசாயிகளை இந்த மழை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மதுக்கூர்

மதுக்கூர் பகுதியிலும் நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஒருசில குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 

கும்பகோணம்

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. புத்தாண்டு தினமான நேற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மழையில் நனைந்தபடி கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். 

பாபநாசம்

பாபநாசம், கோபுராஜபுரம், பெருமாங்குடி, திருப்பாலத்துறை, அரயபுரம், வங்காரம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பல மணி நேரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாய்ந்து, வயலில் தண்ணீர் தேங்கி உள்ளது. 

திருப்பனந்தாள்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள பந்தநல்லூர், காவனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது. பொங்கல் பண்டிகையையொட்டி பயிரிடப்பட்டிருந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பயிர்கள் பாதிப்பு

கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் தப்பி பிழைத்த பயிர்கள் தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாத காரணத்தாலும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால் மழைநீர் வடிவதில் சிரமம் உள்ளது. வயல்களில் இருந்து மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப குறைந்தது ஒரு வாரம் ஆகலாம். 
மழை தொடரும் நிலையில் நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் அழுகும் ஆபத்து உள்ளது. பொங்கலுக்காக சம்பா பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் தற்போது பாதிக்கப்பட்டு இருப்பதால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. பாதிப்புகளை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறையினர் முறையாக கணக்கெடுக்க வேண்டும். 

நிவாரணம் வழங்க வேண்டும்

33 சதவீதத்திற்கு மேலான பயிர் பாதிப்புகள் மட்டுமே கணக்கெடுக்கப்படும் என்ற உச்சவரம்பை நீக்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 
இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story