பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 1 Jan 2022 7:56 PM GMT (Updated: 1 Jan 2022 7:56 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்:

மீண்டும் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக கொட்டித் தீர்த்ததால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகள், 33 அணைகள், 10 தடுப்பணைகள் 2 நீர்த்தேக்கங்கள் ஆகிய நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின. தற்போது மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைய தொடங்கியது.
இந்நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை விட்டு, விட்டு மழை பெய்தது. இதைத்தொடர்ந்து காலை முதல் மாலை வரை பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இரவிலும் மழை நீடித்தது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
இதனால் ஏரிகள் மீண்டும் நிரம்பி மறுகாலில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. பகல் நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களில் பலர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். ஏற்கனவே மார்கழி மாதத்தில் கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், தற்போது பெய்த மழையால் மேலும் குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது.
பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்போது 88,802 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-7, பாடாலூர்-16, அகரம்சீகூர்-36, லெப்பைக்குடிகாடு-23, புதுவேட்டக்குடி-18, பெரம்பலூர்-1, எறையூர்-25, கிருஷ்ணாபுரம்-5, தழுதாழை-13, வி.களத்தூர்-7, வேப்பந்தட்டை-13.
அதிக மழை பொழிவு
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சராசரி மழையளவை விட 490.18 மி.மீ. அதிகமாக மொத்தம் 1,351.18 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.
விவசாயிகள் கவலை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வடகிழக்கு பருவமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதற்கு இன்னும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது மக்காச்சோள பயிர் அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால், மக்காச்சோள பயிர் பாதிப்படைந்துள்ளது. இதேபோல் 2-ம் போகம் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி விளைச்சலாகி இருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் பருத்தி நனைந்து காய் கொட்டி வருகிறது. ஏற்கனவே அழுகிய நிலையில் உள்ள சின்ன வெங்காய பயிர் மழையால் மேலும் பாதிப்படைய தொடங்கியுள்ளது. இதனால் கடன் வாங்கி பயிரிட்டுள்ள விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.

Next Story