வங்கி மேலாளர் வீட்டில் 6¾ பவுன் நகை-ரூ.75 ஆயிரம் திருட்டு


வங்கி மேலாளர் வீட்டில் 6¾ பவுன் நகை-ரூ.75 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 2 Jan 2022 1:26 AM IST (Updated: 2 Jan 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

வங்கி மேலாளர் வீட்டில் 6¾ பவுன் நகை-ரூ.75 ஆயிரம் திருட்டுபோனது.

பெரம்பலூர்:

வங்கி மேலாளர்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 41). இவர் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருவதால், தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் புதிய வெங்கடேசபுரம் வடக்கு, வெங்கடாஜலபதி நகர், சித்தர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த 28-ந்தேதி மகேந்திரன் தனது தந்தையின் 8-ம் நாள் துக்க காரியத்திற்காக குடும்பத்தினருடன் பசும்பொன்னுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை மகேந்திரன் வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து, மகேந்திரனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகேந்திரன் சொந்த ஊரில் இருந்து மதியம் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6¾ பவுன் தங்க நகைகளும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளும், ஒரு அரைஞாண் கொடியும் மற்றும் வீட்டு வேலைக்காக வைத்திருந்த ரூ.75 ஆயிரமும் திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டு கதவின் தாழ்ப்பாள், பீரோவை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களை மர்மநபர்கள் விட்டு சென்றுள்ளனர்.
ஒரே கும்பலா?
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
இது தொடர்பான புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், அவற்றில் ஈடுபடுவது ஒரே கும்பலா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story