பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி


பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2022 1:51 AM IST (Updated: 2 Jan 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியாகினர். சிறுவன், பெண் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியாகினர். சிறுவன், பெண் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பட்டாசு ஆலை 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே களத்தூர் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழிவிடு முருகன் (வயது 42) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். 
இந்த பட்டாசு ஆலை ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகின்றன. இங்கு 23 அறைகள் இருந்தன. இதில் 45 பேர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. 
நேற்று புத்தாண்டு பிறப்பையொட்டி 15 பேர் வேலைக்கு வந்திருந்்தனர். காலை 9 மணி அளவில் ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் மருந்து கலக்கும் பணி நடந்தது.
வெடி விபத்து 
அப்போது, உராய்வின் காரணமாக திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் உள்ள 7 அறைகளும் தரைமட்டமாகின. அந்த அறைகளில்தான் பணியாளர்கள் இருந்ததால் பெரும்பாலானவர்கள் இந்த வெடிவிபத்தில் சிக்கினர். அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாசி, வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 
4 பேர் பலி 
சம்பவ இடத்திற்கு போலீசாரும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
மீட்பு பணியின் போது மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார் (38), சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (55), பாறைப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (40) ஆகியோரின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. 
மங்களம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி (35), சாணார்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற முத்துக்குமார் (35), அழகர்சாமி (33), வேல்முருகன் மனைவி கனகரத்தினம் (37), பாறைப்பட்டியை ேசர்ந்த வேல்முருகன் ( 38), காளியப்பன் (30), முருகேசன் (35), மனோ அரவிந்த் (8), முனியசாமி (42), ராமசாமி (40) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். 
இதில் சிறுவனான மனோ அரவிந்த், பட்டாசு ஆலை தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மகன் ஆவார். பள்ளிக்கு விடுமுறை என்பதால் தனது தந்தையுடன் பட்டாசு ஆலையை பார்க்க வந்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தந்தை, மகன் என இருவரும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
இந்தநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4- ஆக உயர்ந்தது.
மீட்பு பணி தாமதம் 
காயமடைந்த மற்ற 7 பேரில் முனியாண்டி, முத்துக்குமார், சிறுவன் மனோ அரவிந்த் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக மதுரை  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிவகாசியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்ற போது திடீரென பகல் 11 மணிக்கு மழை பெய்தது. இதனால் சற்று நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புத்தாண்டு பிறப்பன்று நடந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story