ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி குமரி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி குமரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2022 1:51 AM IST (Updated: 2 Jan 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, குமரி மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில், 
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, குமரி மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
2021-ம் ஆண்டு முடிவடைந்து 2022-ம் ஆண்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியும் மகிழ்ந்தனர்.
அதே சமயம் குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
தாணுமாலயசாமி கோவில்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்தோடு வந்து வழிபாடு நடத்தினர்.
நீண்ட வரிசை
நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் காலை பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் அழகம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
கொரோனா பரவல் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டது. பக்தர்கள் முகக் கவசம் அணியவும் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story