ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகளை அலங்கரிக்க தயாராகும் மணிகள்
கொட்டாம்பட்டியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு சலங்கை கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு சலங்கை கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக நடப்பது உண்டு. இதற்காக காளை வளர்ப்போர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் காளைளை ஜோடித்து அதற்கு அழகு சேர்க்கும் விதமாக காளையின் கழுத்தில் சலங்கை மணி, நெற்றியில் ஆபரணம் அணிவிப்பது, முன்னங்காலில் கால் சலங்கை கட்டுவது, உடலில் சந்தனம், குங்குமம் வைப்பது என ஒவ்வொரு காளை வளர்க்கும் உரிமையாளர்களும் பின்பற்றி வருவதை மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் காண முடியும்.
கழுத்தில் மணி
அதிலும் குறிப்பாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளைகளுக்கு இந்த ஜோடிப்பு கட்டாயமாக இடம்பெறும். ஜல்லிக்கட்டு காளை கழுத்தில் அணிவிக்கப்படும் மணி மாடுகளுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. மணி எழுப்பும் ஓசை ஜல்லிக்கட்டு காளை வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் அதன் கழுத்தில் சலங்கை மணிகள் அணிவிக்கப்பட்டே அவிழ்க்கப்படுகின்றன. அத்தகைய சலங்கை மணி தயாரிக்கும் பணி கொட்டாம்பட்டி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
காளைகளுக்கு அழகு சேர்க்கும் இந்த சலங்கை மணியில் நிறைய ரகங்கள் உள்ளன. அதிலும் காரைக்குடி அரியக்குடி சலங்கை மணி தான் மிகவும் சிறப்பு பெற்றது. அரியக்குடி மணி, பித்தளை மணி, சில்வர் மணி, ஆக்கமணி, பாலமணி, வாழைக்காய்மணி என பல்வேறு ரகங்களாக இந்த மணிகள் உள்ளன.
தயாரிப்பு
மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டுகளுக்காக இந்த சலங்கை மணிகள் உற்பத்தி செய்யும் பணி கொட்டாம்பட்டியில் சூடுபிடித்துள்ளது. இங்கிருந்து சிவகங்கை, தஞ்சாவூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்யப்பட்டும் அனுப்பப்படுகிறது. கால்நடைகளின் பதப்படுத்தப்பட்ட தோலை கொள்முதல் செய்து அதன்மூலம் இந்த சலங்கை மணிகள் தயாரிக்கப்படுகிறது.
அதனுடன் சலங்கை மணிகளை கோர்த்து நூல் மூலம் செய்யப்படும் குஞ்சங்களை தைத்தும் நேர்த்தியாக வடிவமைக்கின்றனர். மணிக்கு அழகு சேர்க்கும் வகையில் மிக அழகாக ‘குஞ்சங்கள்’ தைத்தும் வடிவமைத்தும் தரப்படுகிறது. ரகத்திற்கு தகுந்தாற்போல மணிகள் தரம் பிரித்து விற்கப்படுகின்றன.
இங்கு சலங்கை மணிகள் மட்டுமல்லாது மாடுகளுக்கு தேவையான மூக்கு கயிறுகள், காளைகளை கட்டுவதற்கான கயிறுகள் மற்றும் கால் சலங்கை மணிகள் உள்ளிட்டவையும் உற்பத்தி செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே சலங்கை மணி தயாரிக்கும் பணி நடைபெறும் என தெரிவித்தனர்
Related Tags :
Next Story