கர்நாடகத்தில் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் குறைப்பு
கர்நாடகத்தில் புத்தாண்டு பரிசாக வீடு, வீட்டுமனைகள், பிளாட்டுகள் வாங்குபவர்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது.
பெங்களூரு: கர்நாடகத்தில் புத்தாண்டு பரிசாக வீடு, வீட்டுமனைகள், பிளாட்டுகள் வாங்குபவர்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது.
இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
10 சதவீதம் குறைப்பு
கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். வீடு, வீட்டுமனை, பிளாட்டுகள் வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் சொத்து வழிகாட்டுதல் மதிப்பை குறைக்கவும் நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. சொத்து வழிகாட்டுதல் மதிப்பு என்பது, இருப்பிடம் மற்றும் கட்டமைப்பின் வகையைப் பொறுத்து, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சொத்தின் குறைந்தபட்ச விற்பனை விலையாகும்.
சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு தொடர்பாக நிதி மற்றும் வருவாய் துறையினருடன் கடந்த ஒரு மாதமாக முதல்-மந்திரி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தார். இதில் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2022-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீடு, வீட்டுமனை, பிளாட்டுகள் வாங்குபவர்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக அமலுக்கு வந்தது
இது வறண்ட அல்லது பாசன நிலம், பிளாட் அல்லது தளம் என அனைத்து வகையான சொத்து பதிவுக்கும் பொருந்தும். சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பால் அரசு வருவாயில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சாதாரண மக்களுக்கும் பயனளிக்கும். இந்த நோக்கத்திற்காக சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இது உடனடியாக இன்று (அதாவது நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை மார்ச் 31-ந்தேதி வரை 3 மாதங்கள் மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது சொத்துக்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
கடலைக்காய் தின்று கொண்டு...
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. அப்போது மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்காக எத்தனை கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார்கள். மேகதாது திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இத்தனை நாட்கள் கடலைக்காய் தின்று கொண்டு சும்மா இருந்து விட்டு, தற்போது மேகதாது திட்டத்திற்காக பாதயாத்திரை செல்வதாக நாடகமாடுகிறார்கள்.
மேகதாது திட்டத்திற்காக வரைவுதிட்ட அறிக்கை தயாரிக்க மட்டும் காங்கிரசார் 6 ஆண்டுகள் எடுத்து கொண்டுள்ளனர். தற்போது மேகதாது திட்டத்தை கையில் எடுத்து அரசியல் நாடகமாடுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று மட்டும் அறிவித்தார்கள். ஆனால் ஒதுக்கவில்லை. மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை செயல்படுத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
மாநிலத்தில் கோவில்கள் தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களை பக்தர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கோவில்கள் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதற்கு தகுதி கிடையாது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story