புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
நெல்லை:
ஆங்கில புத்தாண்டையொட்டி, நெல்லை கோவில்களில் பக்தர்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு
2021-ம் ஆண்டு நிறைவடைந்து நேற்று 2022-ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆங்கில புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.
நெல்லையில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவில்களில் வழிபாடு
இதேபோல் நேற்று அதிகாலை முதல் இந்து கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில், சந்திப்பு சாலை குமார சுவாமி கோவில், சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், மேலதிருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சென்று வழிபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பக்தர்களை கோவில் ஊழியர்கள் இடைவெளி விட்டு நெருக்கடி இல்லாமல் செல்லுமாறு கூறினார்கள். மேலும் முககவசம் அணிந்திருப்பதை கண்காணித்து, கைகளில் கிருமி நாசினியும் தெளித்தனர்.
இதுதவிர அவரவர் குல தெய்வம் கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
Related Tags :
Next Story