சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் ஈரோடு வ.உ.சி. பூங்கா- புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் ஈரோடு வ.உ.சி. பூங்கா- புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jan 2022 3:31 AM IST (Updated: 2 Jan 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வ.உ.சி. பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் அங்குள்ள புதர்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு
ஈரோடு வ.உ.சி. பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் அங்குள்ள புதர்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வ.உ.சி. பூங்கா
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொழுது போக்கு அம்சமாக, ஈரோடு வ.உ.சி. பூங்கா உள்ளது. மரங்கள் நிறைந்து காணப்படுவதால் பகல் நேரங்களிலும் இங்கு வெப்பம் அதிக அளவில் இருக்காது. மேலும் மாலை நேரங்களில் ஏராளமான பறவைகள் இங்குள்ள மரங்களில் தங்குவதால் இவைகளின் சத்தம் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
இதனால் பூங்காவிற்கு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் ஈரோட்டை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் வருவார்கள். பண்டிகை காலங்களில், பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரூ.6½ கோடி
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி பராமரிப்பு பணிக்காக பூங்கா பூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.6 கோடியே 60 லட்சம் செலவில் ஈரோடு வ.உ.சி. பூங்காவை சீரமைத்து எழில்மிகு பூங்காவாக அழகுபடுத்தும் பணிகள் தொடங்கின.
பணிகள் பெயரளவுக்கு மட்டுமே நடந்து முடிந்த நிலையில் கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக பூங்கா திறக்கப்பட்டது. தற்போது பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பூங்காவில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகமாக உள்ளது.
சமூக விரோத...
மேலும் பூங்காவில் அதிக அளவில் புதர் உள்ளதால் அங்கு சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பூங்காவிற்குள் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை.
பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறுவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் பூங்காவிற்குள் பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே புதர் மண்டி கிடக்கும் பூங்காவை சீரமைத்து, அங்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story