‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 Jan 2022 5:00 PM IST (Updated: 2 Jan 2022 5:00 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கிய மழைநீரால் அவதி

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இளங்கோநகர் பகுதிக்குட்பட்ட காந்தி தெருக்களில் மழைநீர் தேங்கி இன்னமும் வடியாமல் இருக்கிறது. இதனால் இப்பகுதிவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. இதனை போக்க மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

- சமூக ஆர்வலர்கள்.

மழைநீர் கால்வாய் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுமா?



சென்னை கொரட்டூர் டி.என்.எச்.பி. காலனி 46-வது தெருவில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. ஒவ்வொரு மழைக்காலத்தின்போது லேசாக பெய்யும் மழைக்கே இத்தெருவில் மழைநீர் குளம்போல தேங்கிவிடுகிறது. எனவே மழைநீரை அகற்றுவதுடன், மழைநீர் கால்வாய் கட்டமைப்புகளை வலுப்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- பொதுமக்கள், கொரட்டூர்.

சாலை செப்பனிடப்படுமா?

சென்னை வளசரவாக்கம் ஜானகிநகர் 6-வது தெருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை போடப்படவில்லை. இருக்கும் சாலையும் செப்பனிடப்படாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதிக்கு ஆளாகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ளவில்லை.

- ஆர்.சுவாமிநாதன், ஜானகிநகர்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி



சென்னை சூளைமேடு வினோபாஜி தெருவில் சாலையோரம் திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. மழை பெய்தாலே போதும், 4 நாட்கள் மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். இந்த மின் இணைப்பு பெட்டியை சரிசெய்து தந்தாலே, மின் இணைப்பு துண்டிக்க வேண்டிய அவசியம் வராது. எனவே மின்வாரியம் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை கையாளுவார்களா?

- சமூக ஆர்வலர்கள்.

எரியாத உயர் கோபுர மின்விளக்கு

சென்னை அடுத்த பம்மல் பகுதியில் நல்ல தம்பி ரோட்டில் தங்க ரத்தினம் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. எனவே மாலை நேரம் வந்தாலே இப்பகுதி இருள் சூழ்ந்து காட்சிதருகிறது. பொதுமக்கள் நடமாட அச்சம் கொள்கிறார்கள். எரியாமல் கிடக்கும் இந்த உயர் கோபுர மின்விளக்கு மீண்டும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- சமூக ஆர்வலர்கள், பம்மல்.

அபாயகரமான மின்கம்பம்



சென்னை ஆவடி திருமுல்லைவாயலில் உள்ள அந்தோணிநகரில் (தனியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில்) உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருக்கிறது. எந்த நேரமும் விழுந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய கள ஆய்வு மேற்கொண்டு இந்த பழுதடைந்து கிடக்கும் இந்த மின்கம்பம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், அந்தோணிநகர்.

கழிப்பறை பராமரிக்கப்படுமா?



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கருங்குழி அடுத்த கிணார் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறை பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் பாழடைந்து உள்ளது. இந்த கழிவறை பராமரிக்கப்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பயன் தரும் நடவடிக்கையாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவறையை பராமரித்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

- முகேஷ்குமார், கிணார்.

நாய்கள் தொல்லைக்கு முடிவு இல்லையா?

செங்கல்பட்டு மாவட்டம் தாம்ப‌ர‌ம் மாந‌க‌ராட்சிக்குட்ப‌ட்ட‌ ஜ‌மீன் ப‌ல்லாவ‌ர‌ம், ம‌ல‌ங்கான‌ந்த‌புர‌ம் 4-வது தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் நடமாடவே அச்சம் கொள்கிறார்கள். ப‌ல்லாவ‌ர‌ம் ந‌க‌ராட்சியிட‌ம் ப‌ல‌முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது. குழந்தைகளை விரட்டி கடிக்க நாய்கள் பாய்கின்றன. தள்ளுவண்டி வியாபாரிகள் இத்தெரு பக்கம் வருவதற்கே மிரளுகிறார்கள். இரவுப்பணி முடித்து வருவோர் பீதியடைகிறார்கள். நாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

- சமூக ஆர்வலர்கள்.

பஸ் வசதி தேவை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி முதல்நிலை ஊராட்சியில் போலீஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் ஏராளமானவை உள்ளன. மக்கள்தொகை அதிகமுள்ள இப்பகுதியில் இருந்து தாம்பரத்துக்கு செல்ல நேரடி பஸ் வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. நேரடி பஸ் வசதி ஏற்பாடு செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் பயன்பெறுவார்கள்.

- சமூக ஆர்வலர்கள்.

Next Story