மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 Jan 2022 7:31 PM IST (Updated: 2 Jan 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர்.

நொய்யல்,
கார் மோதல்
கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). நாணப்பரப்பு கொங்கு நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்த இவர் அப்பகுதியில் சொந்தமாக அட்டை தயாரிக்கும் மில் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்தார். 
பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக நாணப்பரப்பு பிரிவு சாலையில் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும்,  முன்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரிகளான வேலாயுதம்பாளையம் காந்திநகர் 11-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (33), காந்திநகர் 10-வது தெருவை சேர்ந்த முருகேசன் (37) ஆகிய 3 பேர் மீதும் பயங்கரமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
2 பேர் பலி
இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தி, கோபால கிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், கார்த்தி, கோபால கிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முருகேசனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில்,  வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிந்து, விபத்தில் இறந்த கார்த்தி, கோபால கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 
மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story