ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 Jan 2022 7:36 PM IST (Updated: 2 Jan 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்,
ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று கரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கரூர் வெண்ணைமலை ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. 
தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. 
1,008 வடைமாலை
இதேபோல கரூர் பசுபதீஸ்வரா அய்யப்பன் கோவிலில் அமைந்துள்ள பசுபதி ஆஞ்சநேயர் சன்னதியில் காலை 5 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து துளசி மாலை, வெற்றிலை மாலை, 1,008 வடைமாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு 7 மணியளவில் பசுபதி ஆஞ்சநேயர், சீதா ராமர் உற்சவ மூர்த்திகள் வீதிஉலா வந்தனர்.
வெண்ணெய்காப்பு அலங்காரம்
கரூர் அண்ணாநகர் கற்பக விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு பஞ்சாமிர்தம், பால், பன்னீர், மஞ்சள், மாதுளை, திராட்சை உள்ளிட்ட 62 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து துளசி மாலை, வெற்றிலை மாலை, 508 வடைமாலை சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.  பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை சாமிக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம் நடைபெற்றது. 
வேலாயுதம்பாளையம்
தோட்டக்குறிச்சி சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி, வெற்றிலை மாலை, வடமலை சாற்றப்பட்டு, வெள்ளிகவசத்துடன் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. 
கிருஷ்ணராயபுரம்-வெள்ளியணை
கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு பூக்கள் மற்றும் வடமாலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெள்ளியணை அருகே பச்சபட்டியில் பழமையான பால ஆஞ்சநேயருக்கு இளநீர், பால், தயிர்  உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை 
குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவில் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு நேற்று பால், பன்னீர், தயிர், பழங்கள், பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடமாலை சாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு அர்ச்சனைகள் செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நொய்யல் 
புன்னம் சத்திரம் அருகே குட்டக்கடையில் அனுமந்தராய பெருமாள் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையடுத்து அனுமந்தராய பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்  உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அனுமந்தராய பெருமாளுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, மலர்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story