திருவள்ளூர் அருகே வெந்நீர் கொட்டி 3 வயது பெண் குழந்தை சாவு
திருவள்ளூர் அருகே வெந்நீர் கொட்டி 3 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனது.
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 31). இவருக்கு திருமணமாகி நித்யஸ்ரீ(3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதியன்று குழந்தை நித்யஸ்ரீ மீது வெந்நீர் எதிர்பாராத விதமாக தவறி கொட்டியது.
இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை மீட்டு, திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை நித்யஸ்ரீ நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story