திண்டுக்கல்லை புரட்டிப்போட்ட கனமழை; சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்


திண்டுக்கல்லை புரட்டிப்போட்ட கனமழை; சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
x
தினத்தந்தி 2 Jan 2022 8:59 PM IST (Updated: 2 Jan 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
விடிய, விடிய மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான குளம், அணைகள் நிரம்பின. அதன்பிறகு பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையே மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் பகல்வேளையில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதையடுத்து இரவு பலத்தமழை பெய்ய தொடங்கியது. இதில் இரவு 8.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய விடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. திண்டுக்கல் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்தது.
ஆறாக ஓடிய தண்ணீர்
இதில் நத்தத்தில் அதிகபட்சமாக 111 மி.மீ., திண்டுக்கல்லில் 102.3 மி.மீ. மழை பதிவானது. மேலும் கொடைக்கானல் போட்கிளப்பில் 49.2 மி.மீ., அப்சர்வேட்டரியில் 46.8 மி.மீ., பழனியில் 24 மி.மீ., நிலக்கோட்டையில் 31 மி.மீ., காமாட்சிபுரத்தில் 18.5 மி.மீ., சத்திரப்பட்டியில் 16.2 மி.மீ., வேடசந்தூர் மற்றும் புகையிலை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் தலா 9.6 மி.மீ. பெய்தது.
இதன்மூலம் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 418.2 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. இதில், திண்டுக்கல்லில் பெய்த மழையால் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
இதற்கிடையே சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருமலைசாமிபுரத்தில் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் வேடப்பட்டி, நத்தம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் நள்ளிரவில் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அந்த தண்ணீர் ஒத்தக்கண் பாலம் வழியாக பாரதிபுரத்துக்குள் புகுந்தது. ஒத்தக்கண் பாலத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. பாரதிபுரத்தில் தெருக்களில் ஆறாக ஓடிய மழைநீர் வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்தது. இதனால் மக்கள் தூங்காமல் விடிய, விடிய கண்விழித்து தண்ணீரை வெளியேற்றினர்.
இதேபோல் திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை பகுதியில் மூங்கில்குளம் நிரம்பி ஏராளமான தண்ணீர் வெளியேறியது. அவ்வாறு வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் உள்ள பெரிய கால்வாய் வழியாக சென்றது.
தூக்கத்தை தொலைத்தனர்
ஒருகட்டத்தில் கால்வாய் நிரம்பி வெளியேறிய தண்ணீர் பொன்மாந்துறை, புதுப்பட்டி ஆகிய ஊருக்குள் புகுந்தது. இதனால் தெருக்களில் ஆறு போல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. ஒருசில பகுதிகளில் வீடுகளை சுற்றி முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில், ரேஷன்கடை மற்றும் கிராமசேவை கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்தது.
இதேபோல் சின்ன பள்ளப்பட்டியிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய விழித்து இருந்தனர். குழந்தைகள், பெண்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.மேலும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.
தடுப்பணை
வத்தலக்குண்டு புறவழிச்சாலையை ஒட்டி செல்லும் இணைப்பு சாலையை மறைத்தபடி தண்ணீர் சென்றது. அந்த வழியாக சென்ற கார் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதால் பள்ளத்தில் சரிந்தது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் பலத்த மழை எதிரொலியாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிந்தன. மேலும் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனுமந்தராயன்கோட்டை தடுப்பணையில் அருவி போன்று தண்ணீர் கொட்டியது. மேலும் மழையால் வாழை, நெல், பூச்செடி பயிரிட்ட தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் சாய்ந்து விழ தொடங்கியது.
செம்பட்டி, ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்குள் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

Next Story