ஜெயந்தி விழாவையொட்டி அனுமன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
ஜெயந்தி விழாவையொட்டி அனுமன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ராவத்தநல்லூர் ஸ்ரீ சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .தொடர்ந்து வெற்றிலை, துளசிமாலை, பண மாலை உள்ளிட்ட மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெண்ணெய் காப்பு, வடைமாலை சாத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புதுப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் சங்கராபுரம் வாசவாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், குளத்தூர் வீர ஆஞ்சநேயர், தேவபாண்டலம் மணி தீர்த்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
தியாகதுருகம்
தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனுமன் ஜெயந்தி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சந்தப்பேட்டை-சங்கராபுரம் சாலை, என்.ஜி.ஜி.ஓ.நகர், தபோவனம், வடக்கு நெமிலி, நாயனூர் ரெயில்வே கேட், அகரம் கிராமம், மணலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story