இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள்


இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள்
x
தினத்தந்தி 2 Jan 2022 9:51 PM IST (Updated: 2 Jan 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம், புஷ்பவனம் கடற்கரையில் படர்ந்துள்ள கடல் சேற்றில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சிக்கி இறந்து கரை ஒதுங்கி வருகிறது.

வேதாரண்யம்:
வேதாரண்யம், புஷ்பவனம் கடற்கரையில் படர்ந்துள்ள கடல் சேற்றில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சிக்கி இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
ஆலிவர் ரெட்லி ஆமைகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும். இந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளிவந்தவுடன், அதை கடலில் விடுவார்கள்.
 அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே கடற்கரைக்கு முட்டையிடுவதற்கு வரும்.
இறந்து கரை ஒதுங்குகின்றன
 இந்த நிலையில் தற்போது புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளேயும், வெளியேயும் சேறு படர்ந்திருப்பதால் முட்டையிட கடற்கரைக்கு வரும் அறிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன. நேற்று மாலையில் வேதாரண்யம், புஷ்பவனம் கடற்கரையில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன.
இறந்து கரை ஒதுங்கி உள்ள ஆமைகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஓதுங்கி உள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
---

Next Story