அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிக்கல்:
மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர் மழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வயல்களில் தேங்கியிருந்த மழைநீரை விவசாயிகள் வெளியேற்றி, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பா, தாளடி சாகுபடி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓக்கூர், ஆனைமங்கலம், வடகரை, 105 மானலூர், கிள்ளுக்குடி, ஆந்தக்குடி, சிகார், காக்கழனி, வெண்மணி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பருவம் தவறி பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து அழுகும் நிலையில் உள்ளது.
1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து அறுவடை நேரத்தில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழையூர்
இதேபோல கீழையூர் ஒன்றியம் திருவாய்மூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு, பிராந்தியங்கரை, மூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் பாத்திகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது. இதை தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் உப்பு பாத்திகளில் மீண்டும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு மாதம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story