விழுப்புரத்தில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்
கரும்புகளை கூடுதலாக கொள்முதல் செய்ய கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக விழுப்புரம் அருகே பிடாகம், நத்தமேடு, குச்சிப்பாளையம், மரகதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்துள்ளனர். கரும்புகளை சாகுபடி செய்துள்ள ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட கட்டுகளை 250 கட்டுகள் வரை மொத்தமாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் கொள்முதல் செய்த நிலையில், இந்த ஆண்டு ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் 60 முதல் 100 கட்டுகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டுக்கான விலை கடந்த ஆண்டு ரூ.340 என்று நிர்ணயம் செய்து கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு ரூ.300 மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
விலை நிர்ணயம்
இதைகண்டித்து நேற்று முன்தினம் கரும்பு விவசாயிகள் விழுப்புரம் பிடாகம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்தகுமார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் 20 கரும்பு கொண்ட ஒருகட்டு என 300 கட்டு கரும்புகள் வாங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய்துறை மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று விவசாயிகளிடம் கரும்பு வெட்டு ஆணை வழங்கும் போது அதில் 100 கட்டுகள் மட்டுமே வாங்கப்படும் என்று கூறியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
பின்னர் மாவட்ட பெருதிட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு மண்டல இணைபதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கலெக்டர் மோகன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சில அதிகாரிகள் இடைதரகர் மூலம் கரும்புகளை குறைந்த விலைக்கு அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தில் வாங்க முடிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு விலை நிர்ணயம் செய்த விலைக்கு எங்களிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், குறைந்தது 300 கட்டு கரும்புகள் வாங்க வேண்டும். மேலும் கரும்பு கட்டு ஒன்றுக்கு ரூ.400 வழங்க வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் மாலை 6 மணிக்கு தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இரவு 11 மணிக்கு மேல் நீடித்தது.
கரும்புகளை கூடுதலாக கொள்முதல் செய்யக்கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story