தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Jan 2022 12:01 AM IST (Updated: 3 Jan 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

(படம்) டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?
சோளிங்கரில் 108 திவ்யதேசத்தில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தக்கான் குளக்கரையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது, பல வருடங்களாக பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. அனுமனின் விஸ்வ ரூப தரிசனத்தை காண சிரமமாக உள்ளது. அந்த மின்சார டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
-கிருஷ்ணமூர்த்தி, சோளிங்கர்.
மடிக்கணினி வழங்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா பெரிய கொழப்பலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2018-ம் ஆண்டு படித்த மாணவிகள் 50 சதவீதம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. பள்ளியில் சென்று கேட்டால் மேலிடத்தில் இருந்து எங்களுக்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். உயர் படிப்புக்கு மடிக்கணினி தேவைப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மடிக்கணினி வழங்க வேண்டும்.
-பிரியதர்ஷினி, பெரியகொழப்பலூர்.
அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க வேண்டும்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா முனியம்பட்டி, பாட்டையூர், சிலாரி ஆகிய கிராமங்கள் வழியாக வேலூரில் இருந்து தடம் எண்:8ஏ என்ற ஏரிபுதூர் செல்லும் அரசு டவுன் பஸ் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 5 மணிக்கு மேற்கண்ட வழியில் இயக்கப்படுவது இல்லை. எனவே 8ஏ என்ற அரசு டவுன் பஸ் முனியம்பட்டி, பாட்டையூர், சிலாரி ஆகிய கிராமங்கள் வழியாக வந்து செல்ல பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமால், முனியம்பட்டி. 
பயணிகள் நிழற்குடை அமைத்து தருவார்களா?
திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் முக்கிய பஸ் நிறுத்தம் வெறையூர். இந்த வழியாக வேலூர், திருப்பதி, பெங்களூரு பஸ்கள் நின்று செல்லும். இங்கு பயணிகளுக்கான நிழற்குடை வசதி இல்லை. பஸ்சுக்கு காத்திருப்போர் மழை, வெயிலுக்காக அங்குள்ள கடைகளில் ஒதுங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட, ஊராட்சி நிர்வாகம் இணைந்து வெறையூரில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும்.
-கிருஷ்ணபிரதாப்சிங், அரகண்டநல்லூர். 
(படம்) சாலையில் கொட்டப்படும் குப்பைகள் 
ஆரணி கொசபாளையம் சாமி தெருவில் மக்கள் அதிகமாக செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குப்பைகளை நாய்கள், மாடுகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. எனவே சாலைகளில் குப்பை கொட்டுவோருக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.
-ஆர்.பிரதீப்ராஜ், ஆரணி. 
சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்
திருவண்ணாமலை நகர பகுதியில் நிமந்தகாரத்தெரு, ஐயங்குளத்தெரு, போத்ராஜா கோவில் தெரு, சன்னதிதெரு, கட்டபொம்மன் தெரு, பைபாஸ் ரோடு, கீழ்நாத்தூர், வேடியப்பன் கேரிவல் தெரு, வேட்டவலம் ரோடு மற்றும் பல முக்கிய வீதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-செல்வா, திருவண்ணாமலை. 

Next Story