18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம்:
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விஸ்வரூப ஆஞ்சநேயர்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் நேற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது.
சோடச அபிஷேகம்
காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், 1000 லிட்டர் பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பச்சரிசி மாவு, எலுமிச்சை பழம் சாறு, கரும்புச் சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன், விபூதி, நெய் உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நீலகண்ட விநாயகர்சாமி சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் அபிஷேக பொருட்கள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
புஷ்பாபிஷேகம்
மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம், சிவந்தி, முல்லை, கொழுந்து, மருக்கொழுந்து, துளசி உள்பட பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தின் வெளியே ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. முக கவசம் அணியாமல் வந்த சிலருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, அரசு வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, பேரூர் செயலாளர் மாடசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெசிம், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தினி பகவதியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் குமரகுரு, சுசீந்திரம் பேரூர் செயலாளர் குமார், கிளைச் செயலாளர் மணி மற்றும் மராமத்து பொறியாளர்கள் அய்யப்பன், ராஜ்குமார், கண்காணிப்பாளர்கள் சிவகுமார், ஆனந்த், வருவாய் கோட்டாட்சியர் சேதுராமன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், அரசு போக்குவரத்து கழக மேலாளர் அரவிந்த் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
--
Related Tags :
Next Story