மதுரையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
மதுரையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது அபாய மணி ஒலித்ததால் தப்பி ஓடிய வாலிபரை 1½ மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
மதுரை,
மதுரையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது அபாய மணி ஒலித்ததால் தப்பி ஓடிய வாலிபரை 1½ மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
ஏ.டி.எம்.மையம்
மதுரை குருவிக்காரன் சாலையில் கணேஷ் தியேட்டர் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகிலேயே வங்கியும் செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள், வணிகர்கள் பணபரிமாற்றத்திற்காக வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில், நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த அபாய மணி ஒலித்தது. இதனை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதற்கிடையே, மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கும் சங்கேத அழைப்பு சென்றுள்ளது. அவர்கள் உடனடியாக மதுரை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.
தனிப்படை
இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிகாலையில் மாநகர பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தனிப்படை போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, அதிகாலை 4.15 மணியளவில் கீழ சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் மறைவான பகுதியில் இருளில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை தனிப்படை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணை
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் வாலிபரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், கீழ சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த சையது யாசின் அலி (வயது 25) என்பது தெரியவந்தது.
அதே சமயத்தில், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, யாசின் அலி தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார் என்பது உறுதியானது.
1½ மணி நேரம்
இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், காலையில் வங்கி ஊழியர்கள் அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதை பார்த்ததால், அதனை கொள்ளையடிக்க இரவில் வந்ததாகவும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற போது அபாய மணி ஒலித்ததால் பயந்துபோய் அங்கிருந்து தப்பிஓடிவிட்டதாகவும் போலீசில் அவர் தெரிவித்தார்.
ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபரை, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து 1½ மணி நேரத்தில் கைது செய்ய தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story