பெங்களூருவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி


பெங்களூருவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் -  மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2022 2:41 AM IST (Updated: 3 Jan 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெங்களூருவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு:
  
வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தீவிரமான நடவடிக்கைகள்

  கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள சிவப்பு பட்டியலில் பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது. அதனால் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். இது வருகிற 7-ந் தேதி நிறைவடைகிறது.

  அதற்கு முன்னதாக முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரைகளை 100 சதவீதம் அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. அந்த நிலை தற்போது ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

காங்கிரஸ் பாதயாத்திரை

  மக்களின் உயிர்களை காக்கும் வகையில் வரும் நாட்களில் பெங்களூருவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இன்னொருபுறம் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் சரிசெய்யப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளை விதித்தால் தான் உயிரிழப்புகளை தடுக்க முடியும். அதிகம் பேர் ஆஸ்பத்திரியில் சேருவதும் தடுக்கப்படும்.

  மேகதாது விஷயத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. யார் என்ன செய்தாலும், மக்களின் உயிர்களை காக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது உறுதி. மந்திரிகள் குழுவின் கூட்டம் ஓரிரு நாளில் நடைபெற உள்ளது. அதிலும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story