பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராகும் கரும்புகள்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராகும் கரும்புகள்
x
தினத்தந்தி 3 Jan 2022 2:46 AM IST (Updated: 3 Jan 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

அறுவடைக்கு தயாராகும் கரும்புகள்

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு கரும்புகள் தயாராகி வருகின்றன. 
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு கதிரவனை வழிபடுவார்கள். 
பொங்கல் பண்டிகையில் தித்திக்கும் கரும்பு முக்கிய இடம் பெறும். பொங்கலிடும் இடத்தில் கரும்புகளை கட்டி அலங்கரித்து இருப்பர். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பை சுவைத்து மகிழ்வர்.
அறுவடைக்கு தயாரான கரும்புகள்
இதனால் பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் வகையில் கரும்புகளை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான அனவன் குடியிருப்பு, பொதிகையடி உள்ளிட்ட இடங்களில் கரும்புகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சுமார் 500 ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. 
அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. தற்போது கரும்பில் உள்ள காய்ந்த தோகைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
விலை நிர்ணயம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்பதால் இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்தில் புகுந்து கரும்புகளை சேதப்படுத்துவது உண்டு. அவைகளிடம் இருந்து கரும்பை பாதுகாப்பதற்காக, பரண்கள் அமைத்து இரவில் விவசாயிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோம்.
இப்படி பல சிரமங்களை தாண்டி, தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. நாங்கள் விளைவிக்கும் கரும்புக்கு அரசாங்கம் கூட்டுறவு சங்கம் மூலம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஏற்றுமதி
இங்கு விளையும் கரும்பு நெல்லைக்கு மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், ஐதராபாத், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ஆர்டர் கிடைத்தவுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story