கோபி தினசரி மார்க்கெட்டில் இருந்த 100 ஆண்டு பழமையான நாவல் மரம் வேருடன் அகற்றம்; வேறு இடத்தில் நடப்பட்டது


கோபி தினசரி மார்க்கெட்டில் இருந்த 100 ஆண்டு பழமையான நாவல் மரம் வேருடன் அகற்றம்; வேறு இடத்தில் நடப்பட்டது
x
தினத்தந்தி 3 Jan 2022 3:53 AM IST (Updated: 3 Jan 2022 3:53 AM IST)
t-max-icont-min-icon

கோபி தினசரி மார்க்கெட்டில் இருந்த 100 ஆண்டு பழமையான நாவல் மரம் வேருடன் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது.

கடத்தூர்
கோபி தினசரி மார்க்கெட்டில் இருந்த 100 ஆண்டு பழமையான நாவல் மரம் வேருடன் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது.
வணிக வளாகம் கட்ட...
ஈரோடு மாவட்டம் கோபி நகரின் மைய பகுதியில் தினசரி மார்க்கெட் உள்ளது. இது 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் தொடங்கப்பட்ட நினைவாக அரச மரம், நாவல் மரம் உள்ளிட்ட 8 வகை மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்து பெரிய மரங்களாக காணப்படுகின்றன. இந்த நிலையில் கோபி தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு ரூ.7 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வணிக வளாகம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
மரம்
அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் அங்குள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதில் நகராட்சிக்கு உடன்பாடு இல்லை.
இதனால் அந்த மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு மரங்களை காக்க நகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மரங்களை அகற்றி வேறு இடத்தில் மறு நடவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
வேருடன் அகற்றப்பட்டது
இதற்கு ஆகும் ரூ.2 லட்சம் செலவை தனியார் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு சிறகுகள் என்ற அமைப்பின் தன்னார்வலர்கள் 15 பேர் நேற்று கோபி தினசரி மார்க்கெட்டில் இருந்த நாவல் மரத்தை வேருடன் பிடுங்கி அகற்றினர். இதன் மொத்த எடை 25 டன் ஆகும். இந்த மரம் லாரியில் ஏற்றப்பட்டு ஈரோடு-சத்தி மெயின்ரோட்டில் வேலுமணி நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எதிரே உள்ள மேல்நிலைகுடிநீர் தொட்டி அருகே குழி தோண்டப்பட்டு வேருடன் மரம் நடப்பட்டது. இதேபோல் தொடர்ந்து மற்ற 7 மரங்கள் அகற்றப்பட்டு நடப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story