ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
எண்ணூர் அருகே இருவேறு இடங்களில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கல்லூரி மாணவர் சாவு
அந்தமானை சேர்ந்தவர் சாயின்ஷா (வயது 20). இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் ராணுவம் தொடர்பான இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இதற்காக அதே பகுதியில் தங்கி இருந்தார்.
நேற்று எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார். பின்னர் தாழங்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் நண்பருடன் குளித்தார். அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலை சாயின்ஷாவை கடலுக்குள் இழுத்துச்சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள், கடலில் மூழ்கி தத்தளித்த சாயின்ஷாவை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாயின்ஷா பரிதாபமாக இறந்துவிட்டார்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் அஜய் (17). கூலி வேலை செய்து வந்தார். நேற்று அஜய் மற்றும் அவரது நண்பர் அபினேஷ் (18) இருவரும் ராமகிருஷ்ணன் நகர் கடற்கரையில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய அஜய், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அஜய் உடல், அதே பகுதியில் இரவில் கரை ஒதுங்கியது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story