தேனி அருகே தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


தேனி அருகே  தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2022 8:25 PM IST (Updated: 3 Jan 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆண்டிப்பட்டி:
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியபாபு. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இந்திராணி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இந்திராணி மீண்டும் கர்ப்பம் ஆனார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தேனியை அடுத்த அரண்மனைப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்த போது கருவின் வளர்ச்சி குறைபாடாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கருவை கலைத்துவிடுமாறு பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே இந்திராணி கருவை கலைக்க சம்மதித்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் இந்திராணிக்கு கருக்கலைப்பு செய்து வயிற்றில் இருந்த 3 மாத சிசுவை வெளியேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவருடைய உடல்நிலை திடீரென மோசமானது. இதனால் தனியார் மருத்துவமனையில் இருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார்.
கர்ப்பிணி சாவு
இதைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திராணியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் இந்திராணியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. 
இதுகுறித்து கணவர் பாண்டியபாபு பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இதனிடையே இந்திராணி இறந்த தகவல் அவரது உறவினர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இந்திராணியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனியார் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது வரை இந்திராணியின் உடலை வாங்க மாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு இந்திராணியின் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story