தமிழகத்துக்கு உணவு மானியமாக ரூ 16 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியது


தமிழகத்துக்கு உணவு மானியமாக ரூ 16 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியது
x
தினத்தந்தி 3 Jan 2022 8:47 PM IST (Updated: 3 Jan 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு உணவு மானியமாக ரூ 16 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியது

ஊட்டி

கொரோனா காலத்தில் மத்திய அரசு உணவு, தானியங்களுக்கு மானிய மாக தமிழகத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி வழங்கியது என்று உணவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

ஊட்டியில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் உணவு மற்றும் பொதுவினியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய அரசின் உணவுத்துறை (உணவு மற்றும் பொது வினியோகம்) செயலாளர் சுதன்சு பாண்டே தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரிசி கொள்முதல் மும்மடங்காக உயர்ந்து உள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இந்தியாவில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. பெட்ரோல் பயன் பாட்டை குறைக்கும் வகையில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. நடப்பாண்டு எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு 10 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ரூ.26 ஆயிரம் கோடி மானியம்

வேளாண் கழிவுகள் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும். எத்தனால் கலப்பு பெட்ரோல் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும். மேலும் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். தமிழகத்தில் உணவு, தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. நாட்டிலேயே பொது வினியோக திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவது வரவேற்கதக்கது. மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி உணவு மானியத்தை தமிழகத்துக்கு வழங்குகிறது.

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட உணவு, தானியங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்கி உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கடையில் ஆய்வு

முன்னதாக பாலகொலா ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிப்பதை மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். 

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித், இந்திய உணவுக் கழக தலைமை பொது மேலாளர் சஞ்சீவ் கவுதம், பொது மேலாளர் (தமிழ்நாடு) பி.என்.சிங், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜாராமன், கோட்ட மேலாளர் (கோவை) ராஜேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story