ரெயில் முன் பாய்ந்து அச்சக தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து அச்சக தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி-நாலாட்டின்புத்தூர் இடையே சாலைப்புதூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டிக்கப்பட்டு ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்தவர் சட்டையில் வைத்திருந்த ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றி பார்த்தபோது, அவர் சிவகாசி காமராஜர் ரோடு, கந்தபுரம் காலனியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் (வயது 57) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும், அவரது மனைவி சகாயமேரி அவருடன் கோபித்துக் கொண்டு, கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதில் மனமுடைந்து அந்தோணிராஜ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அந்தோணிராஜூக்கு ஆனந்தமதன் (34), அருண் (30) என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆனந்தமதன் சென்னை ஆயுதப்படை போலீசிலும், அருண் (30) ராணுவ வீரராகவும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரெயில் முன் பாய்ந்து அச்சக தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story