குளத்தில் மீன்பிடிக்க அனுமதி கோரி வலையுடன் வந்து மீனவர்கள் மனு


குளத்தில் மீன்பிடிக்க அனுமதி கோரி வலையுடன் வந்து மீனவர்கள் மனு
x
தினத்தந்தி 3 Jan 2022 10:28 PM IST (Updated: 3 Jan 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க அனுமதி கோரி மீன்பிடி வலையுடன் வந்து மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர்
தாராபுரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க அனுமதி கோரி மீன்பிடி வலையுடன் வந்து மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
மீன் பிடிக்க அனுமதி
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தில்லை முத்து தலைமையில் மீனவர்கள் மீன்பிடி வலையுடன் வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மீன்பிடிக்க தகுதியான நீர் நிலைகளில் மீன்பிடிக்கும் குத்தகை பெறுவதில் தமிழகத்தில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் அருகே கொங்கூர் இடைச்சியம்மன் குளம் 78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் குத்தகை எடுத்து 200 குடும்பத்தினர் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் சமீபகாலமக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமத்தை தனியாருக்கு கொடுக்கிறார்கள்.
அதுபோல் கொங்கூர் இடைச்சியம்மன் குளத்தில் மீன் பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒரு குளத்தில் தான் மீன்பிடித்து வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே கொங்கூர் குளத்தில் மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மயான வசதி
தாராபுரம் சூரியநல்லூர் ஊராட்சி இடையன் கிணறு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் ஆதிதிராவிடர் காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு மயான வசதி இல்லை. தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஓடை புறம்போக்கில் 15 சென்ட் இடம் ஒதுக்கி மயானமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மயானத்துக்கு செல்லும் பாதை சரிவர இல்லை.
ஒவ்வொரு முறையும் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல ரூ.4 ஆயிரம் செலவில் பொக்லீன் எந்திரம் மூலமாக பாதையை சீரமைத்த பின்னரே மயானத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மயானத்துக்கு செல்ல வேண்டிய பாதையை சீரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
காங்கேயம் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையோரம் 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு வந்து மனு கொடுத்தனர்.

Next Story