பண்ருட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பண்ருட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
மாணவன்
கடலூர் சாவடி பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகன் முகமது அப்பாஸ் (வயது 11). இவன் பண்ருட்டி அருகே பக்கிரிபாளையத்தில் உள்ள மதர்சா அரபி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று காலை முகமது அப்பாஸ் கடலூரில் இருந்து வழக்கம்போல் பண்ருட்டி செல்லும் அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டான். பக்கிரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அதில் இருந்து அவன், இறங்க முயன்றான். ஆனால் அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு விட்டது.
சக்கரத்தில் சிக்கி பலி
பின்னர் அந்த பஸ் திருவதிகை ரெயில்வே கேட் முன்பு உள்ள வேகத்தடையில் நின்று புறப்பட்டது. அந்த சமயத்தில் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே இறங்கிய முகமதுஅப்பாஸ் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான்.
இதுபற்றி அறிந்த பக்கிரிபாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவனின் உறவினர்கள் அரசு பஸ் டிரைவரை கைது செய்யக்கோரி பண்ருட்டி-கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவர் கைது
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார், முகமது அப்பாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் பண்ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த சக்திவேல்(27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story