ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு கத்திக்குத்து


ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 3 Jan 2022 11:13 PM IST (Updated: 3 Jan 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு கத்தியால் குத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது42). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், தற்போது மறைஞாயநல்லூரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓட்டலில்  தூங்கிக்கொண்டிருந்த போது  அங்கு  அவரது நண்பரும், சர்வ கட்டளை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவருமான சரவணன்(32) என்பவர்வந்தார். பின்னர் அவர் ஓட்டலில் தனி அறையில் சமையல் செய்து கொண்டிருந்த விஜயகுமாரின் மனைவியிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த விஜயகுமார், சரவணனை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணன் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் ஓட்டலுக்கு வந்து என்னை பற்றி கிராம மக்களிடம் ஏன் தவறாக சொல்லுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போதும் விஜயகுமாருக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Next Story