மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
கல்லூரி மாணவர்
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளையை சேர்ந்தவர் சேம் பென்னட். இவருடைய மகன் பென்சேக் (வயது19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பென்சேக் மற்றும் அவரது நண்பர் சிஜன் (21) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புதுக்கடை பகுதிக்கு வந்துவிட்டு வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சிஜன் ஓட்டி சென்றார். பென்சேக் பின்னால் அமர்ந்திருந்தார்.
பலி
புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியில் வந்த போது ஒரு ஆட்டோ குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதனால், மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த குடிநீர் தொட்டியில் மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் பென்சேக் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிஜன் படுகாயம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story