பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 Jan 2022 11:40 PM IST (Updated: 3 Jan 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

கரூர், 
கொரோனா தடுப்பூசி
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 203 பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மேலும், பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் முதலாமாண்டு பயில்பவர்கள் என மொத்தமாக சுமார் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
25 குழுக்கள்
இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறையை சேர்ந்த 25 மருத்துவர்கள், 75 செவிலியர்கள் உள்ளிட்ட 100 எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளர்கள், 25 குழுக்களாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி முழுவீச்சில் செலுத்தப்படும். 
 இவ்வாறு அவர் தெரிவித்தார். 
இதில், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி தலைமையாசிரியர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தோகைமலை-நொய்யல்
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைைமயாசிரியை வளர்மதி தலைமையில், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுசாமி, மகேந்திரன், கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
நொய்யல் அருகே புன்னம்சத்திரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராகவி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். அதேபோல் செம்மடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சுமார் 1,900 மாணவ, மாணவிகளுக்கு ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குளித்தலை
குளித்தலையில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூ ஊசி போடும் முகாம் நேற்று நடந்தது. குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் தொடங்கிவைத்தார். அரசு மருத்துவர் அமீர்தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசியை செலுத்தினர். 
அரசு ஆண்கள் பள்ளியில் 220 பேருக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 530 பேருக்கும், அய்யர்மலை அரசு பள்ளியில் 244 பேருக்கும் நேற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story