ராஜேந்திரபாலாஜியை பா.ஜனதா ஒளித்து வைக்க அவசியம் இல்லை-அண்ணாமலை பதில்
ராஜேந்திரபாலாஜியை பா.ஜனதா ஒளித்து வைக்க அவசியம் இல்லை என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அப்போது, ராணி வேலுநாச்சியார் புகழ் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறினார்.
சிவகங்கை,
ராஜேந்திரபாலாஜியை பா.ஜனதா ஒளித்து வைக்க அவசியம் இல்லை என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அப்போது, ராணி வேலுநாச்சியார் புகழ் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறினார்.
ராணி வேலுநாச்சியார்
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 292-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜனதா மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடி புகழாரம்
ராணி வேலு நாச்சியாரின் 292-வது பிறந்த நாள் விழாவையொட்டி, பிரதமர் மோடி தன் முகநூல் பக்கத்தில், நம்முடைய வேலுநாச்சியார் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். வேலுநாச்சியாரின் புகழ் இந்தியா முழுவதும் எடுத்து செல்லப்படும். ராணி வேலுநாச்சியார் போன்ற 75 அற்புதமான தலைவர்களை போற்றி, 75 விழாக்கள் நடத்த வேண்டும் என்பது பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனின் எண்ணம்.
வேலு நாச்சியார் சிலையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் அவரை பற்றிய பாடம் இடம் பெற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
வெள்ள நிவாரண தொகை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் சட்டபூர்வமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரத பிரதமருக்கு தமிழக மக்கள் மீது அன்பு, பாசம் குறையாமல் இருந்து வருகிறது. ஆனால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது வேறு மாதிரி இருக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது வேறு மாதிரியாக இருக்கிறார்கள்.
தமிழக மாணவர்களுக்கு 1,652 மருத்துவ சீட் கூடுதலாக பிரதமர் கொடுத்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ இடங்கள் தற்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது. இப்போது தி.மு.க. புரிந்து கொண்டுவிட்டது. இப்போது உண்மையை பேசுகிறார்கள். அதை பா.ஜனதா வரவேற்கிறது.
அவசியம் இல்லை
ராஜேந்திர பாலாஜி எங்களின் தோழமை கட்சியில் உள்ள முக்கியமான தலைவர். அவரை பா.ஜனதா கொண்டு போய் ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் குற்றமற்றவர் என நிரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story