ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி?-பரபரப்பு தகவல்கள்


ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி?-பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:43 AM IST (Updated: 4 Jan 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியானது.

திசையன்விளை:
திசையன்விளை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்   வீட்டில் கொள்ளை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடி பழைய கோவில் தெருவைச் சேர்ந்தவர் சைமன் (வயது 68). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது வீட்டில் கடந்த 1-ந்தேதி நள்ளிரவில் மேல்மாடி வழியாக மர்மநபர் புகுந்து, பீரோவில் இருந்த 51 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்தார். 

பின்னர் வீட்டின் தரைத்தளத்துக்கு வந்த மர்மநபர், அங்கிருந்த கைக்கடிகாரத்தை திருடியபோது சைமனின் குடும்பத்தினர் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடி விட்டார்.மேலும், இடையன்குடியில் சுந்தர்சிங், ஜெபா, கோல்டன் டேனியல், ரமேஷ் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ரமேஷின் வீட்டில் புகுந்த மர்மநபரை ரமேசும், அவரது டிரைவரும் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, இடையன்குடி-ஆனைகுடி விலக்கில் கேட்பாரற்று நின்ற மினி லாரியை போலீசார் கைப்பற்றினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

தம்பதி உள்பட 3 பேர் கைது

இதில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே தட்டான்பட்டியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன்கள் பெஞ்சமின் (33), ஈசாக் (31), பெஞ்சமின் மனைவி காளீசுவரி (30) ஆகிய 3 பேரும் மினி லாரியில் இடையன்குடிக்கு சென்று சைமனின் வீட்டில் கொள்ளையடித்ததும், மேலும் 4 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 51 பவுன் நகைகள், ரூ.33 ஆயிரம், 5 செல்போன்கள், ஒரு கைக்கடிகாரம், மினி லாரி, 2 கார்கள், ஒரு டிராக்டர், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை மீட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

கைதான பெஞ்சமின் மீது மதுரையில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக திசையன்விளை அருகே உவரியில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து கொள்ளையடிக்க நோட்டமிட்டதும் தெரிய வந்தது.கைதான பெஞ்சமின் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.

கொள்ளை கும்பலை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.

Next Story