வெடி விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகைக்கான காசோலை பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சிவகாசி
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகைக்கான காசோலை பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வெடி விபத்து
சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி மாலை 3 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த 2 மாடி வீடு தரைமட்டமானது. இதில் மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கட்டிடத்தின் ஒரு பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படும் காகித குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். மற்றொரு பகுதியில் பேன்சி பட்டாசுகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்தில் வெடிகள் வெடித்து சிதறி கட்டிடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் கார்த்தீஸ்வரி(வயது 33), ஹமிதா(55) ஆகியோர் கருகிய நிலையில் பிணமாக மீட்டனர்.
நிவாரணம்
வெடி விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் ராமநாதனின் உறவினர் ஒருவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து 2 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக உறுதி அளித்தார். அதன்படி 2 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டிட உரிமையாளர் தரப்பில் வழங்கப்பட்ட காசோலையை வெடி விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு கொண்டு சென்று பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வங்கி கணக்கில் போதிய பணம் இருப்பு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து வெடி விபத்தில் இறந்த கார்த்தீஸ்வரி, ஹமிதா 2 பேரின் குடும்பத்தினர் சுமார் 50 பேர் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம், சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story