மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்துறை:
பாலியல் தொந்தரவு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சிகுளம் காலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 86 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் அறிவியல் ஆசிரியர் ராஜமாணிக்கம் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான பாடங்கள் எடுக்கும்போது கிராமத்து வழக்கு மொழியில் பேசி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாணவிகளிடம் விசாரணை
இந்நிலையில் பாலியல் தொந்தரவு பற்றி ஏற்கனவே மாணவிகள் கொடுத்த தகவலின்பேரில் அப்பகுதி பொதுமக்கள், நேற்று அந்த ஆசிரியர் பள்ளிக்கு வரும்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து விசாரிக்க சென்று உள்ளனர். பள்ளியில் ெபாதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் வேலை செய்த ஆசிரியர் ஒருவர் இதேபோன்ற பிரச்சினையில் தாக்கப்பட்டதை அறிந்த, அந்த ஆசிரியர் உடனடியாக அங்கிருந்து தலைமறைவானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மதன்குமார், குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நதியா உள்ளிட்டோர் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தினர்.
போக்சோவில் வழக்கு
இது குறித்த புகாரின்பேரில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜமாணிக்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story