7 பேரின் விடுதலை குறித்து கவர்னருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும்


7 பேரின் விடுதலை குறித்து கவர்னருக்கு  மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும்
x
தினத்தந்தி 4 Jan 2022 1:25 AM IST (Updated: 4 Jan 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

7 பேரின் விடுதலை குறித்து கவர்னருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும்

சேலம், ஜன.4-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து கவர்னருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று சேலத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சிறையில் ஆய்வு
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று காலை சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களால் தயார் செய்யப்படும் உணவு பொருட்களை பார்வையிட்டார். மேலும் அமைச்சரிடம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிறை வார்டன்கள் கொடுத்தனர். பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,351 பேர் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர். தற்போது கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கைதிகளுக்கு சம்பளம்
கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை கைதிகளுக்கு சிறையிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு முதலில் மாவட்ட சிறையில் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்தபிறகு தான் மத்திய சிறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இங்கு இருப்பவர்களுக்கு கொரோனா பற்றிய அச்சமோ, பயமோ கிடையாது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கு தேவையான தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அனைத்து கட்டில்களும் சிறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ரொட்டிகள் தயாரிப்பதற்கு சேலம் சிறைக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியின் மூலம் மாதந்தோறும் கைதிகள் ஒவ்வொருக்கும் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது.
பட்டியல் தயாரிப்பு
வீரப்பனின் சகோதரர் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு பரோல் கொடுப்பது பற்றி பிரச்சினை கிடையாது. ஆனால் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைக்குட்பட்டு வந்தால் நிச்சயமாக விடுதலை குறித்து பரிசீலிக்கப்படும். அண்ணா பிறந்தநாளையொட்டி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஒரே அரசாணையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அரசாணை வெளியிட வேண்டி உள்ளது. முதற்கட்டமாக 60 முதல் 70 பேருக்கு வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் இருந்து கோப்புகள் முதல்-அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் கவர்னருக்கு அனுப்பப்படும். அவருடைய அனுமதியின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
அழுத்தம் கொடுக்கப்படும்
மதுரை சிறைத்துறையில் ரூ.2½ கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் யார் மோசடி செய்திருந்தாலும் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படமாட்டாது. மேலும் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சிறைக்கு கைதிகளை பார்க்க வருபவர்களிடம் பணம் பெறுவதாக எழுத்து பூர்வமாக புகார் வந்தால் அதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. 7 பேர் விடுதலை குறித்து கவர்னரே முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டு நல்ல முடிவு தெரிவிக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். 7 பேர் விடுதலை தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இதுபற்றி மீண்டும் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
இடமாற்றம் செய்யப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் சிலர் தங்களது உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் அங்கேயே பணியாற்றுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்வதை தவிர்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சை
இந்த ஆய்வின் போது கலெக்டர் கார்மேகம், கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக அமைச்சர் ரகுபதி ஆய்வு நடத்த சிறைக்குள் சென்ற போது, அவருடன் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் உள்ளே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story