தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 1:32 AM IST (Updated: 4 Jan 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

மயான கட்டிடம் வேண்டும்
 தஞ்சை மாவட்டம் கொளக்குடியில் உள்ள மயானக்கொட்டகை கஜாபுயலில் சேதமடைந்து அடியோடு அடித்து செல்லப்பட்டது. அதன் பிறகு கொளக்குடி பகுதியில் மயானக்கொட்டகை அமைக்கப்படவில்லை. இதனால் இறுதிசடங்கு செய்ய வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இறந்தவர்களுக்கு வெயிலிலும், மழையிலும் நின்று இறுதி சடங்கு செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தற்காலிகமாக குடிசை அமைத்து இறுதி சடங்குகளை செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொளக்குடியில் மயான கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.    
-கொளக்குடி கிராமவாசிகள், தஞ்சை.
 பள்ளம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை பகுதி 16-வது வார்டு வைத்திலிங்க கொத்தனார் சந்தில் உள்ள பாதாள சாக்கடை குழிகள் சீரமைக்க தோண்டப்பட்டன. இதனையடுத்து பாதாள சாக்கடை குழியை சுற்றி தோண்டப்பட்ட இடங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. அதுமட்டுமின்றி பாதாள சாக்கடை குழிகள் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-சங்கரன், தஞ்சை.
 குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது. குறிப்பாக குடிநீர் தொட்டியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் விஷப்பூச்சிகள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக குடிநீர் தொட்டி உள்ள பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குடிநீர் குழாய்களும் உடைந்த நிலையில் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முனிய செல்வம், பட்டுக்கோட்டை.
 ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி அருமலைக்கோட்டை ஆற்றங்கரைத்தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆற்றங்கரைத்தெருவாசிகள், அருமலைக்கோட்டை.

Next Story