பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு


பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம்  கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 1:40 AM IST (Updated: 4 Jan 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலையை பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கும்பகோணம்:
தஞ்சையில் மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலையை பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
சிலை திருட்டு தடுப்பு போலீசார்
தஞ்சை அருளானந்த நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் இயக்குனர் ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் வழிகாட்டுதலின்படி தனிப்படையினர் சில நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்தனர்.
பச்சை மரகத லிங்கம் மீட்பு
பின்னர் அவர்கள், தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள சாமியப்பன் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த சாமியப்பன் மகன் அருணபாஸ்கரிடம் தொன்மையான கோவில் சிலைகள் ஏதேனும் உள்ளதா? என விசாரணை செய்தனர். 
விசாரணையில் அவர், தனது தந்தை சாமியப்பன் வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்சமயம் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பச்சை மரகத லிங்கத்தை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட மரதக லிங்கம் பல கோடி ரூபாய் மதிப்பிலானது ஆகும். 
கோர்ட்டில் ஒப்படைப்பு 
இந்தநிலையில் மீட்கப்பட்ட மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், அசோக் நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய போலீஸ் குழுவினர் நேற்று மாலை சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் கோர்ட்டில் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் ஒப்படைத்தனர்.
சிலையை ஆய்வு செய்த நீதிபதி சண்முகப்பிரியா, போலீசார் கொடுத்த தகவலின்படி சிலை குறித்த விவரங்களை சரிபார்த்து மரகதலிங்கத்தை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் செயல்பட்டு வரும் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். 
பாதுகாப்பு மையத்தில்...
அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உள்ளிட்ட போலீசார் நேரடியாக உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு மரகதலிங்கத்தை எடுத்துச்சென்று பாதுகாப்பாக வைத்தனர். 
அப்போது நீதிபதி சண்முகப்பிரியாவும் பாதுகாப்பு மையத்திற்கு வந்து மரகதலிங்கம் வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
பேட்டி 
இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த இந்த மரகதலிங்கத்தை கூடுதல் பாதுகாப்புடன் கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். 
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்வேறு ரகசியங்கள் வெளிவரும்
தஞ்சையில் கைப்பற்றப்பட்ட இந்த மரகதலிங்கம் திருக்குவளையில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி திருக்குவளை பகுதிக்கு சென்று மரகதலிங்கம் குறித்த முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களை தற்போது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தொடர்ந்து மரகதலிங்கம் குறித்த அடுத்த கட்ட விசாரணை நடைபெறும். கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு மரகதலிங்கம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த மரகதலிங்கம் குறித்த பல்வேறு ரகசியங்கள் வெளிவரும். 
24 மணி நேரமும் பாதுகாப்பு 
தற்போது உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மரகதலிங்கத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 
விலை உயர்ந்த மரகத லிங்கம் இங்கு வைக்கப்பட்டுள்ளதால் இந்த பாதுகாப்பு மையத்தை உயர் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் 10-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story