குண்டு பாய்ந்ததில் காயமடைந்து தஞ்சை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுவன் சாவு
புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தான். சிறுவனின் சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தான். சிறுவனின் சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 வயது சிறுவன்
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள கொத்தமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் புகழேந்தி(வயது 11). இவர் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 30-ந்தேதி அருகில் உள்ள பசுமலைப்பட்டியில், காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசார் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு, வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்தது.
சிகிச்சை பலனின்றி சாவு
இதையடுத்து படுகாயமடைந்த புகழேந்தியை கீரனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிறுவனின் தலையில் இருந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
உறவினர்கள் போராட்டம்
சிறுவன் இறந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனை வளாகத்தில் அவருடைய உறவினர்கள் திரண்டனர். அவர்கள் சிறுவன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை வளாகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவனின் பெற்றோர் மற்றும் உறுவினர்கள், புகழேந்தியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் தரையில் உருண்டும், புரண்டும் அழுதனர். மேலும் சிறுவனின் உடல்நிலை குறித்து சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், வேண்டும் என்றே இறப்பை தாமதப்படுத்தி உள்ளனர் என்றும் கூறி கதறி அழுதனர். அவர்களை கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை சமாதானப்படுத்தினார்.
இதனையொட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story