கப்பலூர் சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம்


கப்பலூர் சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம்
x
தினத்தந்தி 4 Jan 2022 2:08 AM IST (Updated: 4 Jan 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

கப்பலூர் சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.

திருமங்கலம், 
கப்பலூர் சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.
அடிக்கடி பிரச்சினை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இது விதிமுறைகளுக்கு மீறி நகர் பகுதியில் உள்ளதாக கூறியும், அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, திருமங்கலம் அரசு மருத்துவமனையை பார்வையிட வந்தபோது அப்பகுதி மக்கள் சுங்கச்சாவடி கட்டணம் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கட்டண விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார். 
தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் மறுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
கட்டண விலக்கு
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருமங்கலம், கப்பலூர், பேரையூர், கல்லுப்பட்டி பகுதி மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்சினை நடைபெற்று வந்த நிலையில் நவம்பர் மாதம் 17-ந் தேதி திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு வார்த்தை நடத்தினார். 
தொடர்ந்து தேசிய நெடுஞ் சாலைத்துறை அறிவுறுத்தலின்படி அந்த பகுதியில் சுங்க கட்டண விலக்கு வேண்டுவோர் குறித்த சர்வே எடுக்கப் பட்டது. 
அறிவிப்பு
ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த முறையான எழுத்துப்பூர்வமான அறிக்கையும் சுங்கக் சாவடி நிர்வாகத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் திட்ட இயக்குனர் நாகராஜன், திருமங்கலம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். வழக்கம்போல் வழங்கப்படும் விதிவிலக்கு உள்ள வாகனங்களை தவிர அனைத்து வாகனங்களுக்கும் கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story