புகார் பெட்டி
புகார் பெட்டி
ஆபத்தான மின்கம்பம்
அந்தியூர் அருகே பாப்பாத்திக்காட்டுப்புதூர் மேட்டுத்தெருவில் மின்கம்பம் உள்ளது. இது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. உடனே மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாப்பாத்திக்காட்டுப்புதூர்.
குடிநீர் வசதி
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட தேவர் மலை கிராமத்தில் உள்ளது கோவிலூர் தெரு. இ்ங்கு சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பந்தேஸ்வரர் சாமி கோவில் திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆனால் இந்த கோவிலூர் தெருவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், தேவர்மலை
புதர்கள் அகற்றப்படுமா?
சிவகிரியில் பேரூராட்சி அலுவலகத்துக்கு சொந்தமான 5 இறைச்சிக்கடைகள் கொண்ட வளாகம் உள்ளது. இதனை நடத்தி வந்தவர்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தினர், வளாகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும் என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தனர். ஆனால் கட்டிடத்தை இடிக்காமல் கம்பி வேலி போட்டு அடைத்து வைத்துள்ளனர். இதனால் அந்த கட்டிடம் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே புதர் மண்டி காணப்படும் அந்த கட்டிடத்தை சீரமைத்து வாடகைக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.சசி, சிவகிரி.
மின்கம்பம் மாற்றப்படுமா?
சத்தியமங்கலம் இக்கரைநெகமத்தில் மின்கம்பம் உள்ளது. இது கடந்த 6 மாதங்களாக மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மின்கம்பம் மீது செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. பேராபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை அகற்றி வேறு மின்கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இக்கரைநெகமம்.
மண்குவியலால் சிரமம்
பவானியில் மேட்டூர் சாலையில் பராமரிப்புக்காக ரோட்டின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் மண் வாரி சாலை ஓரம் குவிக்கப்பட்டது. அதன்பின்னர் மண்குவியலை சமன் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக சாலை ஓரத்துக்கு செல்லும்போது தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையோரம் குவிந்துள்ள மண் குவியலை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், பவானி.
கல்லறை தோட்டத்தில் தேங்கும் தண்ணீர்
கவுந்தப்பாடி அருகே உள்ள எல்.எம்.பாலப்பாளையத்தில் கல்லறை தோட்டம் உள்ளது. மழை காலங்களில் அந்த பகுதியில் ஓடும் தண்ணீர் இ்ங்கு வந்து தேங்கி விடுகிறது. இதேபோல் அருகே உள்ள கீழ்பவானி கிளை வாய்க்கால் தண்ணீரும் கல்லறை தோட்டத்துக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இறந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து புதைப்பதற்காக குழி தோண்டும்போது சவப்பெட்டி மண்ணில் புதையாமல் தண்ணீரில் மிதக்கிறது. இந்த அவலத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லறை தோட்டத்துக்குள் தண்ணீர் புகாமல் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
ஊர்ப்பொதுமக்கள், எல்.எம்.பாலப்பாளையம்.
கழிவுநீர் கலந்த தண்ணீர்
ஈரோடு நாராயணவலசில் திருமால் நகரில் வீடுகளுக்கு மாநகராட்சி குழாய் வழியாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. கடுமையான துர்நாற்றத்துடன் வரும் இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரில் எப்படி கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை தடுக்க வேண்டும்.
சந்திரசேகரன், நாராயணவலசு.
Related Tags :
Next Story