புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது.
புதுச்சேரி,
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கம் போல நடைபெற்றன.
வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாடிச் சென்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் புதுச்சேரியில் புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் புதுச்சேரியில் 45 பேர், காரைக்காலில் 13 பேர், மாஹேவில் 7 பேர் மற்றும் ஏனாமில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் தற்போது 214 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் தற்போது பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story