பிளாஸ்டிக்கை ஒழிக்கிறார், புதுமை படைக்கிறார்


பிளாஸ்டிக்கை ஒழிக்கிறார், புதுமை படைக்கிறார்
x
தினத்தந்தி 4 Jan 2022 1:50 PM IST (Updated: 4 Jan 2022 4:11 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா டேஷ்பண்டே. சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத காதல் மோகம் கொண்டவர். இதன் காரணமாக மலையேற்றப் பயணங்களுக்கு அவ்வப்போது செல்வார். அப்போதெல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கு செய்யும் தீங்கை நேரில் கண்டு வேதனை அடைந்தார்.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதற்கிடையே, பட்டப்படிப்பை முடித்த அமிதா, 2005-ம் ஆண்டு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியில் சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர் பின்னர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

2013-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தவர் மலையேற்ற பயணங் களுக்கு ஆயத்தமானார். கூடவே பிளாஸ்டிக் பயன்பாட்டால் இயற்கைக்கு நேரும் கெடுதல்களை சரிசெய்யும் முயற்சியையும் கையில் எடுத்தார். இதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, பை உள்ளிட்ட பொருட்களாக மாற்ற முடியும் என்பதை அறிந்தார். பின்னர் ரீ சக்ரா என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

இதன் மூலம் இரண்டு அலகுகள் அமைக்கப்பட்டன. நகரத்தில் இயங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து, முதல் அலகிற்கு வழங்குகிறது. அங்கு பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீரில் சுத்தம் செய்யப்படுகின்றன. பின்பு அவை உலரவைக்கப்பட்டு இரண்டாவது அலகுக்கு கொண்டு செல்லப் படுகின்றன. அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் ராட்டை மூலம் நூலாக மாற்றப்படுகின்றன. இந்த பணியில் பழங்குடியின ராட்டை நெசவாளர்கள் ஈடுபடுகிறார்கள். பின்பு பிளாஸ்டிக் நூல்கள் நெசவு பிரிவுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு பழங்குடியினர் நெசவுத் தறி மூலமாக பைகளை நெய்கிறார்கள். தரையில் போடப்படும் மிதியடி (மேட்), கூடை உள்ளிட்ட பொருட்களும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை இப்படி பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கு அமிதா சந்தித்த சவால்கள் ஏராளம். அவற்றை சந்தைப்படுத்துவதற்கும் சிரமங்களை எதிர்கொண்டார். மறுசுழற்சி செய்யப்பட்ட இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆரம்பத்தில் தயக்கம் நிலவியது. விலை அதிகமாக இருக்கிறது என்ற கருத்தையும் பலர் முன்வைத்தனர். மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்களை ஏன் வாங்க வேண்டும்? என்ற கேள்வியையும் எழுப்பினார்கள். அதற்கு பதில் சொல்லும் விதமாக பிளாஸ்டிக் மூலம் பொருட்கள் தயாரிக்கும் பணிகளை வீடியோவாக உருவாக்கினார். அந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை பார்த்த பலரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி பணியில் இருக்கும் சிக்கல்களை புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர். பலரும் தாமாக முன் வந்து மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கினர். கடந்த ஆண்டு மட்டும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் மூலமாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி பொருட்கள் மூலம் ஏராளமான பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பணிபுரிபவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story