நண்பர் நினைவாக விழிப்புணர்வு விதைக்கும் ‘ஹெல்மெட் மேன்’
இந்தியாவின் ‘ஹெல்ஹெட் மேன்’ என்று அழைக்கப்படும் ராகவேந்திர குமார், தனது வீட்டையும், நிலத்தையும் விற்று சுமார் 50 ஆயிரம் ஹெல்மெட்டுகளை இலவசமாக வினியோகித்திருக்கிறார். அவரது நண்பரின் எதிர்பாராத மரணம்தான் அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அவரது நெருங்கிய நண்பர் கிருஷ்ண குமார் தாக்கூர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். ஹெல்மெட் அணிந்து பயணித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்ற தகவல் ராகவேந்திர குமாரை வேதனையில் ஆழ்த்தியது.
ராகவேந்திரகுமார், கைமூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர். கிருஷ்ண குமாரின் பூர்வீகம் பீகார் மாநிலத்திலுள்ள மதுபானி. இருவரும் உயர் கல்வி படிப்பதற்காக டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு கிருஷ்ண குமார் பொறியியல் படிப்பை தொடர்ந்திருக்கிறார். ராகவேந்திரா கிரேட்டர் நொய்டாவில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்து படிப்பை தொடர்ந்ததால் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள். விபத்தில் நண்பரின் எதிர்பாராத மரணம், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை ராகவேந்திராவுக்குள் விதைத்திருக்கிறது.
2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சாலை பாதுகாப்பு குறித்து பிர சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். இதுவரை 22 மாநிலங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஹெல்மெட்டுகளை இலவசமாக விநியோகித்துள்ளார். 8.5 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச புத்தகங்களையும் வழங்கி இருக்கிறார்.
“நான் காரில் பயணிக்கும்போது கூட சாலைப் பாதுகாப்பை வலியுறுத்துவதற்காகவே ஹெல்மெட் அணி கிறேன். இதை அணிவது வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஹெல்மெட் அணிவதற்கு ஊக்குவித்தல், இலவசமாக ஹெல்மெட் விநியோகம் செய்தல், சாலைப் பாதுகாப்பு குறித்து மக்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை போக்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறேன். இந்த சேவை பணியை தொய்வின்றி தொடர்வதற்காக 2016-ம் ஆண்டின் இறுதியில், எனது வழக் கறிஞர் வேலையை விட்டுவிட்டேன்’’ என்கிறார்.
ராகவேந்திரா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். தன்னுடைய கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். வாரணாசியில் மேல் நிலை கல்வியை முடித்திருக்கிறார். குடும்பத்தில் நிலவிய வறுமை சூழலால் உயர் படிப்பை உடனே பயில முடியவில்லை. சில காலம் கிடைத்த வேலைகளை செய்து பணம் சேமித்த பிறகே டெல்லிக்கு சென்று சட்டப்படிப்பை தொடர்ந் திருக்கிறார். அப்போதுதான் கிருஷ்ண குமாரின் நட்பு கிடைத்திருகிறது. ஹெல்மெட் அணியாததுதான் அவரது உயிரை பறித்துவிட்டது என்ற வேதனைதான் ஹெல்மெட்டுகளை இலவசமாக விநியோகிக்கும் சேவை பணியை தொடங்க வைத்திருக்கிறது.
நொய்டாவில் இருந்து பீகார் வரை பயணிக்கும்போது சாலையில் யாராவது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறார். இப்போது புத்தகம் வாங்க முடியாத நிலையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்.
Related Tags :
Next Story