ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்:-
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
தொடர் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் பரந்தாமன், ஒன்றிய தலைவர் அறிவுடைநம்பி, பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கோட்டூர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், சங்க நிர்வாகிகள் பழனிசாமி, கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.30 ஆயிரம் இழப்பீடு
கடந்த ஆண்டு பேரிடர் காரணமாக அழிந்து போன நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும். அறுவடை செய்ய வேண்டிய நிலையில் குறுவை பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மழை பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் (திருத்துறைப்பூண்டி), சிவகுமார் (கோட்டூர்) ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் காரணமாக மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story