‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி தனசேகரன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அங்குள்ள 5-வது தெரு மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதற்கு தீர்வாக தெரு விளக்குகள் சரிசெய்யப்பட்டு எரிகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
சாலை வசதி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் மறுகால்குறிச்சி கிராமம் மலையாண்டி கோவில் முன்பு சாலை வசதி சரிவர இல்லை. இதனால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஆறுமுகம், நாங்குநேரி.
சேதம் அடைந்த குடிநீர் குழாய்
நெல்லை பேட்டை எம்.ஜி.பி. 5-வது தெரு அருகே பொது குடிநீர் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷாஜகான், பேட்டை.
பல்லாங்குழி சாலை
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையில் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பால் பண்ணை வரை பல மாதங்களாக சாலை குண்டும், குழியுமாக பல்லாங்குழி போன்று கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
புவனா, கே.டி.சி.நகர்.
தேங்கிக்கிடக்கும் குப்பைகள்
நாங்குநேரி தாலுகா களக்காடு யூனியன் புலியூர்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோதைசேரி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அருகில் குப்பைகள் அள்ளப்படவில்லை. மேலும், அதன் அருகே அங்கன்வாடி மையம், தொடக்கப்பள்ளி, கோவில் ஆகியன அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மு.அய்யப்பன், கோதைசேரி.
சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
முக்கூடல் பேரூராட்சியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
த.திலகா, முக்கூடல்.
வீணாகும் குடிநீர்
நெல்லை பேட்டை திருத்து பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. எனவே, இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜ், பேட்டை.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
நெல்லையில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் அரியநாயகிபுரத்தில் சாலையின் நடுவே இரவு நேரத்தில் மாடுகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்துச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு்க்கொள்கிறேன்.
மணி, கடையம்.
கொசு தொல்லை
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் வாறுகாலில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால், இரவில் மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனவே, கொசு மருந்து புகை அடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.டி.டெக்கான், கீழக்கலங்கல்.
தெருவிளக்கு எரியவில்லை
கடையநல்லூர் சொக்கம்பட்டி காந்திநகர் காலனியில் பெரும்பாலான தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காளிதாசன், சொக்கம்பட்டி.
பன்றிகள் தொல்லை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்துக்கு செல்லும் தாமிரபரணி ஆற்றங்கரையோர சாலையானது, பன்றிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு கொட்டப்படும் எச்சில் இலைகள் உள்ளிட்ட கழிவுகளை கிளறி சாலைக்கு கொண்டு வந்து விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் ஆற்றுக்கு குளிக்க வரும் மக்களையும் கடிக்க வருகின்றன. மேலும் நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா வரும் மக்களும் இதனைக் கண்டு முகம் சுளிக்கின்றனர். எனவே, பன்றிகளை அப்புறப்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.
Related Tags :
Next Story